| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.18 திருப்பூவணம் - திருத்தாண்டகம் | 
| வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
 கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
 காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
 இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
 எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
 பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 1 | 
| ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும் அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
 ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்
 ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
 சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
 செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
 பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 2 | 
| கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
 சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
 சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
 அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
 ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
 பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 3 | 
| படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும் பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
 நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
 நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்
 உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்றும்
 மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
 புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 4 | 
| மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும் மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
 இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
 இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
 கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
 ஆயிராமா முகத்தினொடு வானிற் றோன்றும்
 புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 5 | 
| பாராழி வட்டத்தார் பரவி யிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
 சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
 திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
 ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
 உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
 போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 6 | 
| தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
 மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
 வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
 துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
 தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
 பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 7 | 
| செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்
 நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
 நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
 மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
 மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
 பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 8 | 
| அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும் அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
 மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
 மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
 திருக்கோட்டி நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
 செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
 பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 9 | 
| ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
 பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
 பலபிறவி அறத்தருளும் பரிசு தோன்றும்
 கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங்
 குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
 பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 10 | 
| ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
 வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
 மகிழ்ந்தொருபால் வைத்தகந்த வடிவுந் தோன்றும்
 நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை
 நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
 போருருவக் கூற்றதைத்த பொற்புத் தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
 
 | 11 | 
| திருச்சிற்றம்பலம் |